ஜெ. கூட லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து தப்ப முடியவில்லை. சிறைக்குத்தான் சென்றார். ஆனால் ஒரு பெண் தாசில்தார், லஞ்ச ஒழிப்புத்துறைக்கே தண்ணி காட்டித் தப்பித்திருக்கிறார். காரணம் அவர் பின்னணியில் இருக்கும் அமைச்சர்.

Advertisment

money

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் கே.பி.கே. குமார். எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த இவரது லாரியை வாகன சோதனை என பெயரில் மடக்கிய நன்னிலம் தாசில்தார் லட்சுமி பிரபா, அதில், அளவுக்கு அதிகமாக லோடு இருப்பதாகக் கூறி, பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்க, குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள், மறுநாள் ரசாயன பவுடர் தடவிய, பணத்தைக் கொடுத்து அனுப்பினர்.

அந்தப் பணத்தை வட்டாட்சியர் லட்சுமி பிரபாவும் அவரது ஓட்டுநர் லெனினும் வாங்கும் போது, அவர்களை மடக்கி தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

Advertisment

இருவரையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கும் போது, அமைச்சர் ஒருவரிடமிருந்து போன் வர, உடனடியாக லஞ்ச தாசில்தார் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையில் இதற்கு முன் இப்படி யாரையும் ஜாமீனில் விட்டதில்லை.

mm

இது குறித்துக் காவல்துறையினரிடம் விசாரித்த போது, ""லஞ்ச தாசில்தாருக்காகப் பேசியவர் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தரப்புதான். அவரது ஆளான சத்தியமூர்த்தி என்பவர் அந்த தாசில்தாரை மீட்கக் களத்தில் குதித்தார். இந்த லஞ்ச அதிகாரி திருவாரூரில் கேபிள் டி.வி.யைக் கவனித்து வந்தவர். அவரைத் தேர்தலுக்காக நன்னிலத்துக்கு மாற்றிக் கொண்டு வந்தவர் அமைச்சர் காமராஜ்தான். இதே போல் அமைச்சர் காமராஜின் வகுப்புத் தோழரான அம்பிகாபதி என்பவர், டாஸ்மாக் மண்டல மேலாளராக இருக்கிறார். அமைச்சரின் செல்வாக்கை வைத்து ஏகத்துக்கும் சம்பாதித்து ரெய்டிலும் இவர் சிக்கினார். அவரையும் சிக்கல் இல்லாமல் விடுவித்தவர் இதே அமைச்சர்தான்'' என்கிறார்கள்.

Advertisment

நன்னிலம் பகுதி மக்களோ, ""அந்த லஞ்ச தாசில்தாரம்மா பணம் வாங்காம எதையும் செய்யமாட்டாங்க. சமீபத்தில் வெள்ள நிவாரண நிதிக்குக் கூட பத்து சதம் கமிஷன் வாங்கித் தரனும்னு எல்லா வி.ஏ.ஓ.க்களுக்கும், ஆர்.ஐ.ங்களுக்கும் ஆர்டரே போட்டாங்க. மணலிலும் கொழுத்த காசு. இந்த லஞ்ச காசில் திருவாரூர்ல பிரமாண்ட வீடு கட்டறாங்க. இவங்களை மாட்டிவிட்டதே ஒரு ஆளும்கட்சி ஒ.செ.தான்'' என்கிறார்கள்.

லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட தாசில்தார் லட்சுமி பிரபாவிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு திருவாரூர் மாவட்டத்தில் தொடர் நெருக்கடியும் மிரட்டலும் வரக் காரணம், சிக்குவதெல்லாம் அமைச்சர் பணமா என்ற சந்தேகம் பரவிக் கிடக்கிறது.